Thursday, October 9, 2014

மாண்டலின் ஸ்ரீனிவாஸ்


1980 இல் கிண்டி பொறியியற் கல்லூரியில் படித்து முடித்த பின் ஜம்ஷெட்பூரில் டாடா நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருந்த நேரம். 'அய்யாக்கண்ணு மெஸ் ' என்ற எங்கள் செல்லமான தமிழ் மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, 9-10 வயதுள்ள ஒரு பையன் அப்பாவுடன் வந்து அமர்ந்தான். அங்குள்ள தமிழ்ச் சங்கத்தின் ( பெயர் என்ன தெரியுமா? மதராஸி சம்மேளனி ! இப்போது மாற்றி விட்டார்களா தெரியவில்லை! ) அமைப்பாளர் ஒருவரும் கூட வந்தார். 'நாளைக்கு என்ன சார் கச்சேரி?' என்றேன். 'இதோ இருக்கானே இந்தத் தெலுங்குப் பையன்தான் மாண்டலின் வாசிக்கப் போகிறான்' என்றார். நான் அதற்கு முன் மாண்டலினை 'ஷோலே' படத்தில் 'மெஹ்பூபா, மெஹ்பூபா ' பாடலில் ஜலால் ஆகா வாசித்துதான் பார்த்திருக்கிறேன். அதில் கர்நாடக இசையைக் கொண்டு வர முடியும் என்பதே  எனக்குத் தெரியாது!

பின்னாளில் தன் காந்தர்வ இசையால் மகுடியில் மயங்கிய பாம்பாக ரசிகர்களை உலகெங்கும் கட்டிப் போட்ட அந்தத் 'தெலுங்குப் பையன் 'இவ்வளவு சீக்கிரம் மறைவான் (ர்) என்று கனவிலும் நினைக்கவில்லை!

என்றாவது ஒரு நாள் திரும்பி வர மாட்டாயா ஸ்ரீனிவாஸ்?

சினிமா விரும்பி  

Wednesday, July 17, 2013

தேடிச் சோறு நிதந் தின்று!பாரதியாரின் உணர்ச்சிப் பிழம்பான கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயற்சித்துப் பார்த்தேன்! முடிவுகள் கீழே!:

தேடிச் சோறு நிதந் தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து -மனம்

வாடித் துன்ப மிக உழன்று - நரை

கூடிக் கிழப் பருவ மெய்திக் - கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

மகாகவி சுப்ரமணிய பாரதி

Oh! Maa Shakti!

Did you think I will also perish like many of those silly folks

who hunt around for their daily food,

indulge in lots of petty gossip,

cause harm to others by their actions,

undergo mental agony themselves,

develop grey hair and grow old and

subsequently become fodder to the cruel Yama?

Mahakavi Subramania Bharati


Monday, April 22, 2013

குதுப் மினார்- சில புகைப்படங்கள்தில்லியில் இத்தனை ஆண்டுகளாக இருந்தும் குதுப் மினாரை அவசரமில்லாமல் அமைதியாகப் பார்த்ததில்லையே என்ற ஆதங்கம் பல வருடங்களாக இருந்தது. போன சனிக்கிழமை அதற்கான நேரம் வாய்த்தது.

நிதானமாக , ஆற அமர, ஒவ்வோர் தூணையும் ரசித்துப் பார்க்க முடிந்தது. மொபைலில் பற்பல புகைப் படங்களையும் எடுத்தேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

சினிமா விரும்பி

Wednesday, March 6, 2013

சுஜாதாவைச் சந்தித்தேன்!பிப்ரவரி 27 அமரர் சுஜாதாவின் நினைவு நாள்.

பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் எழுத்தாளர் சுஜாதாவின் அசுர ரசிகன் நான்!

ஜம்ஷெட்பூரில் சில காலம் பணி புரிந்த போது நண்பர்கள் சொல்வார்கள்: "சுஜாதாவே அசந்து விடுவார்டா, இப்படி ஒரு வெறியன் இருப்பதைப் பார்த்து!"

1993 இல் தில்லியில் 'ஸ்கோப்' வளாகத்தில் எங்கள் அலுவலகத்தின் கீழேதான் ஆறாவது மாடியில் BEL தில்லி அலுவலகம் இருந்தது. ஒரு நாள் லிப்ட் திறக்கும் போது உள்ளே பார்த்தால் BEL மணல் நிற சீருடை அணிந்த ஐந்தாறு பேர் ( ஓரிருவர் தமிழரல்லாதோர் போல் தோன்றியது). நடு நாயகமாக ஒருவர், சுஜாதாவின் பாஸ் போல. பக்கத்தில் மிக உயரமாஆஆஆஆஆஆஆஆன சுஜாதா! ஜிலீர் என்று நாக்குக்கடியில் ஷாக் அடித்தாற்போல் இருந்தது! பாஸ் சுஜாதாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார் "Sometime back, I read an article in 'Manjari''என்று.

தரைத்தளத்தில் இறங்கி அவர்களுடன் கூடவே 'தேனா வங்கி' வாசலில் நிறுத்தப் பட்டிருந்த வெள்ளை நிற அம்பாஸடர் வரை போனேன்.

"சார் நீங்கள் எழுத்தாளர் சுஜாதாதானே?"

"தான்".

என்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டேன். பிரபல நாடகாசிரியரான என் சித்தப்பா பெயரையும் சொன்னேன். ''அவரை நல்லாத் தெரியுமே எனக்கு" என்றார்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நானே BEL அலுவலகம் போனேன் . புதுவரவுகளின் நேர்முகத் தேர்வுக்காக பெங்களூரிலிருந்து இரண்டு நாள் பயணமாக வந்திருக்கிறார் என்று அறிந்தேன். அவருடைய தில்லி (பெங்காலி) உதவியாளருக்கு ஒரே ஆச்சரியம்!

"தமிழ்நாட்டில் சிவாஜி, எம்ஜியாருக்குப் பிறகு இவர்தான் பிரபலம் என்பார்கள். நீங்கள் அதை நிரூபிக்கிறீர்களே! அவரை எப்படி அடையாளம் கண்டீர்கள்?"

"என்னப்பா இது? நாங்கள் பார்க்காத சுஜாதா போட்டோவா!" .

சுஜாதாவை அறைக்குள் போய்ப் பார்த்து மறு நாள் மதியம் அப்பாயிண்ட்மென்ட் வங்கிக் கொண்டேன். ஆனால் இரண்டாம் நாள் இண்டர்வியூ சீக்கிரமே முடிந்து விட அவர் கிளம்பிப் போய் விட்டார். கன்னாட் ப்ளேசில் அவர் அண்ணன் MTNL உயர் அதிகாரி திரு ராஜகோபாலனிட்ம் பேசப் போயிருக்கிறார் என்று அறிந்தேன். டைரக்டரியில் அவர் P&T (அந்தக் காலத்தில் மொபைல் எல்லாம் ஏது?!) நம்பரைத்தேடிப் பேசியதில் " யாரோ உன் வாசகராம் "என்று சுஜாதாவிடம் கொடுத்தார் அவர். எனக்குக் கொடுத்த அப்பாயிண்ட்மென்டைத் தவற விட்டதற்கு வருந்தினார். அடுத்த முறை சந்திப்போமே என்றார். கடைசி வரை அந்த அடுத்த முறை வரவேயில்லை! சில நாட்களிலேயே BEL இல் இருந்து பணி மூப்பு அடைந்து சென்னை வாசியாக மாறி விட்டார்.

அதன் பிறகு 'அம்பலம்' இணைய இதழில் தவறாமல் எழுதுவார். ஓரிரு முறை என்னுடைய ஈ மெயில் கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறார்.

மிகப் பெரிய பில்ட் அப்புக்குப் பிறகு வெறும் ஆன்டி கிளைமாக்ஸாக முடிந்து விட்டாலும் , என்னால் என்றுமே மறக்க முடியாத ஒரு வி.ஐ.பி. சந்திப்பு இது! கிட்டத் தட்ட ஒரு மாதம் வரை இந்தக் கதையைச் சொல்லி நண்பர்களிடம் மொக்கைப் பட்டம் வாங்கிக் கொண்டிருந்தேன்!

சினிமா விரும்பி

Wednesday, February 22, 2012

அது என்ன நொய்டா?

புது தில்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் நகரம் மிகவும் தொலைவாக இருந்ததால் தில்லியின் ஓக்லா தொழிற்பேட்டைக்கு அருகே நொய்டா (New Okhla Industrial Development Authority-Noida) என்ற ஒரு இடத்தை எண்பதுகளின் ஆரம்பத்தில் துவங்கினார்கள். தொழிற்பேட்டை மற்றும் வீட்டு வசதி வாரியம் போன்ற ஒரு அமைப்பு. தமிழில் நாய்டா என்றோ அல்லது நோய்டா என்றோ எழுதினால் விபரீதமாக அர்த்தம் வருவதால் நொய்டா என்று தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதுவது வழக்கமாகி விட்டது! ஒரு காலத்தில் ஓக்லாவின் அருகில் உ.பி.யின் சில பசும் வயல்வெளி கொண்ட கிராமங்களில் இருந்து உருவாக்கப் பட்ட நொய்டா இன்று சூரஜ்பூர் வரை நொய்டா மற்றும் கிரேடர் நொய்டா என்று பல்கிப் பெருகி விட்டது! இவற்றை காஸியாபாத் மாவட்டத்தில் இருந்து வெட்டி எடுத்து கௌதம் புத்(தா) நகர் என்று ஒரு புது மாவட்டத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் தாண்டினால் புலந்த் ஷஹர் மாவட்டமே வந்து விடுகிறது!

இன்று எப்படியோ, ஆரம்ப காலத்தில் மிகவும் திட்டமிட்டுக் கட்டப் பட்ட ஒரு துணைக்கோள் நகரம் நொய்டா. நகருக்குள்ளே கிட்டத்தட்ட எல்லா சாலைகளுமே ஒன்றுக்கொன்று இணையானவை அல்லது செங்குத்தானவை (Grid அமைப்பு). எனவே, போக வேண்டிய இடத்துக்குக் குறுக்கு வழியில் சீக்கிரம் போய்ச் சேருவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை! காஸியாபாதை ஒப்பிடும்போது இங்கு போலீசார் கண்காணிப்பு அதிகம், குற்றங்கள் குறைவு என்பார்கள். ஆனால் இன்றைய தேதியில் கிரைம் ரேட்டில் இரண்டுமே சமமாகத்தான் உள்ளன. விலைவாசியோ தில்லியை விட ஒரு மாற்று அதிகம்! ஒரு முறை முலாயம் சிங்க் யாதவ் மற்றும் ஷீலா தீட்சித் அரசுகளுக்கிடையே கடும் மோதல் ஏற்பட, பல மாதங்கள் தில்லியின் DTC பஸ்கள் நொய்டாவுக்கு உள்ளேயே தலை காட்ட முடியவில்லை! இப்போது DTC யின் பச்சை நிறத் தாழ் தள சொகுசுப் பேருந்துகளும் காமன்வெல்த்துக்குப் பின் வந்த சிவப்பு நிற அதி சொகுசுப் பேருந்துகளும் நொய்டாவெங்கும் விரவிக் கிடக்கின்றன.

குற்றங்களைப் பற்றி எழுதும் போது, குற்றங்களில் மெகா குற்றங்கள் இரண்டு நொய்டாவில்தான் நடந்தன என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டே ஆக வேண்டும். நான்காண்டுகளுக்கு முன், ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் வீட்டு சொந்தக்காரரும் பணியாளனும் சேர்ந்து வீட்டு வேலைக்காக வந்த பல சிறுமிகளையும் இளம் பெண்களையும் பாலியல் கொடுமைக்குப் பின் கொலையும் செய்து கூலாகப் பாதாள சாக்கடையில் தள்ளியதாகக் குற்றம் சாட்டப் பட்ட நிடாரி என்னும் இடம் நொய்டாவின் மத்தியில் உள்ளது. தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் வந்து கொண்டே இருந்ததை டிவியில் பார்த்திருப்பீர்கள். தவிர, இன்று வரை சிபிஐக்கே சவால் விடும் வழக்கான பதினான்கு வயது ஆருஷி என்ற பள்ளிச் சிறுமி கொலை வழக்கு. அதிகாலையில் தன் வீட்டிலேயே இந்தச் சிறுமி கொலையுண்டு கிடந்தது, கூடவே ஹேம்ராஜ் என்ற வீட்டுப் பணியாளும் கொலையுண்டு கிடந்தது என்று சிக்கல்கள் பல நிறைந்த இந்த வழக்கு குற்றவியல் வல்லுநர்களையே ஸ்தம்பிக்க வைக்கிறது.

நொய்டாவின் தண்ணீர் மிகவும் புகழ் வாய்ந்தது! வெவ்வேறு செக்டரில் வெவ்வேறு சுவை தரும் நிலத்தடி நீர்தான் நொய்டாவின் மொத்த நீராதாரம். இந்தக் கிணறுகளுக்கு 'ரேனே வெல்' என்று பெயர் (யாராவது அர்த்தம் தெரிந்தால் சொல்லுங்கள்!).எவர்சில்வர் பாத்திரம் கூட சட்டென்று ஓட்டை விழும் அளவுக்கு ஆபத்தான நீர்! இதில் துணி துவைப்பதை மறந்து விடுங்கள் ! கடந்த ஐந்து வருடங்களாக கங்கை நீர் பைப்லைன் மூலம் கொண்டு வரப் பட்டு இந்த லோக்கல் நீரோடு கலக்கப் பட்டு விநியோகிக்கப் படுவதால் நிலைமை சற்றே மேம்பட்டது. 'தினமும் கங்கா ஸ்நானம் செய்வதனால் புதிது புதிதாய் தினமும் பாவம் செய்கிறாயா?' என்று நண்பன் கிண்டலடிப்பான்! இதைத்தவிர இண்டேன், பாரத் கேஸ் போன்ற நிறுவனங்கள் வழங்கும் சிலிண்டர்களுக்கு மாற்றாக 'இந்திரபிரஸ்தா கேஸ்' நிறுவனம் குழாய் மூலம் உங்கள் சமையலறைக்குள்ளேயே கொண்டு வந்து தரும் சமையல் எரிவாயுவும் உண்டு. பல செக்டர்களில் பரந்து கிடக்கும் தொழிற்பேட்டைப் பகுதியில் பார்த்தால், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக HCL போன்ற சில தனியார் நிறுவனங்கள் நொய்டாவில் அலுவலகங்கள் அமைப்பதில் முழு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒரு காலத்தில் நம்ப ஊர் மேற்கு மாம்பலம் 'நேஷனல்' தியேட்டர் போன்ற 'அல்கா சினிமா' மற்றும் சற்றே பெரிய 'தரம் பேலஸ்' என்ற இரண்டே திரையரங்குகள் மட்டுமே இருந்த நொய்டாவில் இன்று பற்பல 'மால்'கள் (சிறப்பு அங்காடி என்பது சரியான தமிழ்தானா?!). ஒவ்வொரு மாலிலும் 'ஸ்பைஸ்', 'பிக் சினிமா', 'வேவ்' என்று மல்டிப்ளெக்ஸ்கள்! 'தில்லித் தமிழ்ச் சங்கம்' மிகவும் தொலைவாக இருப்பதால் இங்கேயே 'அவ்வை தமிழ்ச் சங்கம்' என்ற பெயரில் முனைப்புடன் நடத்தி வருகிறார்கள். 'தி கிரேட் இந்தியா பிளேஸ்' என்ற சிறப்பு அங்காடியில் இவர்கள் அவ்வப்போது நடத்தும் நிகழ்ச்சிகள் பிரபலமானவை.

'தில்லி மெட்ரோ' நொய்டாவுக்கும் வரப் போகிறது என்று பத்திரிகையில் படித்த போது 'வரும்..... ஆனா வராது!' என்று வடிவேலு- 'என்னத்த' கன்னையா போல் இழுத்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் பிரமிக்கத்தக்க வேகத்தில் மெட்ரோ நொய்டாவுக்கு வந்தே விட்டது. செக்டர் 15, 16, 18, பொடானிகல் கார்டன், கோல்ப் கோர்ஸ் , செக்டர் 32 என்று ஆறு ஸ்டேஷன்கள் . தினமும் தில்லி சென்று வரும் அரசு மற்றும் தனியார் அலுவலர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, மெட்ரோ ஒரு வரப்ரசாதம். முதல் பெட்டியைப் பெண்களுக்கென்றே ஒதுக்கி விட்டார்கள். ஒரு சிக்கலான பார்முலாவை உபயோகித்து தில்லி மெட்ரோவும் நொய்டா நிர்வாகமும் வருமானத்தைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். (நான் போன முதல் ட்ரிப்பிலேயே மொபைல் போன் சுலபமாகப் பிக்பாக்கெட் ஆனது வேறு கதை!). இன்றைய தேதியில் நொய்டாவின் ஓரங்களில் வீட்டு மனை / அபார்ட்மென்ட் விற்கும் எல்லா வீட்டுத் தரகரும் தலையிலடித்துச் செய்யும் சத்தியம் ' அடுத்ததாக மெட்ரோ இந்த வழியாகத்தான் போகப் போகுது; ரேட்டு எகிறிடும் பாருங்க!'. சமீபத்தில் நொய்டா எக்ஸ்டென்ஷன் என்னும் பகுதியில் குறைந்த விலையில் கிடைக்கும் குடியிருப்புகளை நம்பி மத்திய வர்க்கத்தினர் பலரும் பெரும் தொகை முன் பணம் கட்டி இருந்தனர். நில ஆர்ஜிதம் பற்றிய விவசாயிகள் போராட்டமும் அதைத் தொடர்ந்து வந்த நீதி மன்ற உத்தரவுகளும் இவர்களின் மூலதனத்தைக் கேள்விக் குறியாக்கி விட்டன . இவர்கள் எல்லோரும் இப்போது கிரேடர் நொய்டா நிர்வாகம் முத்தரப்புக்கும் (நுகர்வோர், பில்டர் மற்றும் விவசாயிகள்) ஒரு சுமுகமான தீர்வு கொடுக்குமா என்று கவலையுடன் காத்திருக்கிறார்கள். கிரேடர் நொய்டாவின் மற்றொரு கோடியில் பட்டா பர்சோல் என்ற கிராமத்தில் இதே போன்ற விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் திக்விஜய் சிங்கும் களமிறங்கத் தேர்தல் அரசியல் உடனே சூடு பிடித்து விட்டது!

சாலை வழியாக தில்லி ஆஸ்ரமிலிருந்து DND என்று செல்லமாக அழைக்கப் படும் டெல்லி- நொய்டா-டைரக்ட் வளைவுப் பாலத்தைப் பிடித்தால் பத்தே நிமிடத்தில் நொய்டாவைத் தொட்டு விடுவீர்கள்! கிரேடர் நொய்டா இதை விட ஹை டெக்! நம்ப ஊர் சோழவரத்தைத் தூக்கிச் சாப்பிடும் பார்முலா ஒன் ட்ராக் (இதற்கும் புத்தர் பெயர்தான்!), இருபத்தைந்து கிலோமீட்டர் 'எக்ஸ்ப்ரெஸ் வே' என்று அதகளம்தான்!

சமீபத்தில் பெஹன் (சகோதரி) மாயாவதி அரசினால் பாபா சாஹேப் அம்பேத்கர் பெயரில் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் 'தலித் பிரேரணா ஸ்தல் அண்ட் கிரீன் கார்டன் ' ('தலித் எழுச்சி இடம்' என்று பொருள் கொள்ளலாம்) ஆகியவை திறக்கப் பட்டன. விசித்திரம் என்னவென்றால் சொல்லி வைத்தாற் போல் நொய்டா மற்றும் தில்லிக்காரர்கள் யாரும் அந்தப் பசுமைப் பூங்காவிற்கு வருகை தருவதாகத் தெரியவில்லை! வாரக் கடைசியில் வரும் எல்லாக் கூட்டமும் வெளியூர்க் கூட்டம்தான்! உள்ளே அண்ணல் அம்பேத்கர், சமூக சீர்திருத்தச் செம்மல்களான சாஹுஜி மகாராஜ், நாராயண குரு, மகாத்மா ஜ்யோதிபா புலே மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் மறைந்த திரு. கான்ஷிராம் ஆகியோரின் சிலைகள் உண்டு. முதல்வர் மாயாவதியின் சிலைகளும் ஏராளமான சிறிய, பெரிய யானை சிலைகளும் இப்போது தேர்தல் கமிஷன் உத்தரவினால் ஊதா நிறப் பாலிதீன் துணியால் மூடப் பட்டுள்ளன. துணியால் போர்த்தினாலும் வளைந்த தும்பிக்கையைப் பார்த்தாலே தெரிந்து விடுகிறது, இது யானை என்று! இந்தத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் உயிருள்ள யானை தெருவில் நடந்து போனால் என்ன செய்வார்களோ! பூங்கா எப்படியோ, மருத்துவமனை உணமையிலேயே உ.பி. யின் பல மாவட்டங்களில் இருந்து வரும் ஏழை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று. இதைத் தவிர, நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காகக் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேரை சட்ட பூர்வமாகக் குடியேறியவர்கள்தானா என்று சரிபார்க்கும் இமாலயப் பொறுப்பும் நொய்டா போலீஸின் தலையில் விழுந்துள்ளது!

மொத்தத்தில் காஸியாபாத் , பரீதாபாத் போன்று தூரமும் இல்லாமல், குர்கானைப் போல் மத்திய வர்க்கத்துக்கு எட்டாக் கனியாகவும் இல்லாமல் தில்லிக்கருகில் கச்சிதமான ஒரு துணைக்கோள் நகரம் நொய்டா. நொய்டாவாசிகள் எவரிடமாவது பேசிப் பாருங்கள் , சளைக்காமல் வர்ணிப்பார்கள் அதன் அருமை பெருமைகளை!

சினிமா விரும்பி

('வடக்கு வாசல்' பிப்ரவரி 2012 இதழில் சிற்சில மாற்றங்களுடன் வெளியானது)

Monday, February 6, 2012

இந்த வார அலப்பரை 5- 'கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா மொழிபெயர்ப்பை!'

சமீபத்தில் சென்னை சென்று வர நேர்ந்தது. விமான நிலையத்தில் ' மெய்ப் புல அறைகூவலர் ' என்று ஒரு அறிவிப்புப் பலகை மிரட்டியது! தலைகால் புரியவில்லை! பிறகுதான் புரிந்தது, 'Physically Challenged' என்பதைத்தான் யாரோ ஆர்வக் கோளாறில் இவ்வாறு மொழி பெயர்த்துத் தள்ளி விட்டார்கள்! அதாவது, மாற்றுத் திறனாளியின் மெய் மற்றும் புலன்களை, அவற்றின் செயல்பாட்டைக் கடவுள் (அல்லது சமூகம்) சோதித்து விட்டாராம், 'சமாளி, பார்க்கலாம்' என்று அறைகூவல் (சவால்) விட்டு விட்டாராம். அப்படியே இருந்தாலும் அடுத்தவர் விட்ட அறைகூவலை ஏற்றுக் கொண்டவர் அல்லவா இவர், இவரை எப்படி அறைகூவலர் என்று அழைக்க முடியும்? வேண்டுமானால் 'உடல்/ மன ரீதியாக சவாலை எதிர் கொள்வோர்' என்று மொழி பெயர்க்கலாம். ஓரளவு சரியாக இருக்கும்.

கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா மொழிபெயர்ப்பை!

சினிமா விரும்பி

Thursday, December 22, 2011

அக்டோபர் 2004 இல் 'எந்திரன்' பற்றி சுஜாதா!


அக்டோபர் 2004 இல் ஆனந்த விகடன் 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் ஷங்கரின் 'ரோபோ' ப்ராஜக்ட் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது தற்செயலாகப் படிக்கக் கிடைத்தது (நன்றி: http://sujatha-kape.blogspot.com). படித்து விட்டு அவர் மறைந்த பின் 2010 இல் வெளி வந்த 'எந்திரன்' படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்!

>>>>>ஷங்கருடன் ‘ரோபோ’ என்று ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அதில் வரும் ரோபாட் இன்றைய தினங்களில் சாத்தியம் இல்லை. கதைக்காக அதற்கு அதிக சாதனை களும், புத்திசாலித் தனமும், மனித உணர்வு களும் தந்தோம். ரோபாட் இயலில் இன்றைய நிலை என்ன என்பதைச் சொல்லி விடுகிறேன். இன்றைய ரோபாட் ஓர் அறைக்குள் நுழைந்து வெளிவரும். தான் எங்கே இருக்கிறோம் என்பதை இரு பரிமாண வரைபடம் செய்து தெரிந்துகொள்ளும். இதற்கே அது ஆயிரக்கணக்கில் செய்தித் துணுக்குகளை உள்ளே பெற்றுக் கொள்ள வேண்டும் குழப்பம் ஏற்பட்டால், ஒரு மூலையில் போய் நின்றுவிடும். இல்லையேல், அடுத்த ஃப்ளாட்டில் திரிந்து, அங்கேயுள்ளவர் களை அலறவைக்கும்.

2010-ம் ஆண்டுக்குள் நீங்கள் இதைவிடச் சற்று புத்திசாலியான வீட்டு ரோபாவை எதிர்பார்க்கலாம். அது தன்னைச் சுற்றியுள்ள உலகை முப்பரிமாணத்தில் பார்க்கும் திறமை பெற்று, இன்றைய ரோபாட்டைவிட ஆயிரம் மடங்கு அதிக தகவல்கள் சேகரித்து அலசும்.

எதிர்கால ரோபாட்டுகளின் சில முன்மாதிரிகள் இன்றே ஆராய்ச்சி சாலைகளில் கிடைக்கின்றன. வாக்குவம் க்ளீனர் பார்த்திருப்பீர்கள். ஆளுதவி இல்லாமல் தானே வீட்டைத் துப்புரவாக தூசுறிஞ்சி சுத்தமாக்கும் வாக்குவம் க்ளீனர்கள் இன்று சாத்தியம். அவற்றால் மாடிப்படி எது, சுவர் எது என்பதைக் கண்டுகொள்ளமுடியும். போகப்போக தன்னிடமுள்ள வரைபடத்தைப் புதுப்பித்துக்கொண்டு, விவரம் சேர்த்துக்கொள்ளும். சுவரில் போய் தானாகவே சார்ஜ் வாங்கிக் கொள்ளும்.

முதல் தலைமுறை முழு ரோபாட்டுகள் மனித வடிவில் இருக்கும். கை கால்கள் வைத்துக்கொண்டு நடக்கும். பல காரியங்கள் செய்யும். ஆனால், உங்களுக்கு நண்பனாக இருக்காது. அதன் மூளையை ஒரு பல்லியின் மூளைக்குச் சமமாகச் சொல்லலாம். சுமார் நூறு ஆணைகள் தெரிந்திருக்கும். ஃபாக்டரியில் வடிவமைத்ததைத் தவிர, புதிய காரியம் எதையும் அதனால் செய்யமுடியாது. புரியவில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு, ஓர் ஓரத்தில் போய் நின்றுகொள்ளும். அதைத் திட்டினால் தெரியாது. திட்டலாம்.

2030-க்குள் இரண்டாம் தலை முறை ரோபாட்டுகள் வந்துவிடும். பல்லியின் மூளையிலிருந்து எலியின் மூளைக்கு உயரும். உதாரணமாக, ஒரு பொருளைக் கையில் எடுக்குமுன், அதன் எடைக்கேற்ப ஒரு கை, இரண்டு கை... ஏன், மூன்று கைகளைக்கூடப் பயன்படுத்தும். போகப்போகக் கற்றுக்கொள்ளும் விதமாக‘ கண்டிஷனிங் மாட்யுல்ஸ்’ என்னும் நிரலின்படி நல்ல காரியங்கள், வேண்டாத காரியங்கள் என்றுவிருப்ப அளவை வைத்துக் கற்றுக் கொள்ளும். அதற்கு எஜமானனின் குரல் பரிச்சயம் உண்டு. அவர் சொல்லும் good, bad போன்ற வார்த்தைகளுக்கேற்ப ஒரு செயலைத் தொடரவோ, நிறுத்தவோ செய்யும். நீங்கள் தூங்கும் சமயத்தில் சப்தமெழுப்பாமலிருக்க அதற்குக் கற்றுக் கொடுக்கலாம்..

மூன்றாம் தலைமுறை ரோபாட், ஒரு குரங்கின் திறமையைக் கொண்டிருக்கும். நாம் செய்வதைப் பார்த்து அதுவும் செய்யும். 'மங்கி ஸீ மங்கி டூ!' உங்கள் வீட்டை முழுமையாக அறிந்திருக்கும். வெளியுலகைப்பற்றி அதற்குத் தெரியாது.

நான்காம் தலைமுறை ரோபாட்டுகள்தான் மனிதனுக்கு அருகே வரும். உதாரணமாக,ஒரு இங்க் பாட்டிலைக் கவிழ்த்தால், இங்க் கொட்டி தரை பாழாகிவிடும் என்பதை அறிந்திருக்கும். அதேபோல் பல எளிய திறமைகளை ஒத்திகை பார்த்துவிட்டுக் கற்றுக்கொள்ளும். இந்த நிலைமை வர 2040 வரை ஆகலாம்.

ரோபாட்டுகள் உங்கள் மகளைக் காதலிக்க, இன்னும் அரை நூற்றாண்டாவது ஆகும்.<<<<<<

சினிமா விரும்பி
Blog Widget by LinkWithin

Followers

MyFreeCopyright

myfreecopyright.com registered & protected