Wednesday, November 11, 2009

தென் கொரியா , ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 2)

பாங்காக்கிலிருந்து சியோல் ஐந்தரை மணி நேரப் பயணம். நமக்கும் தென் கொரியாவுக்கும் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேர வித்தியாசம். பரப்பளவில் தமிழ்நாட்டை விடச் சிறியது. (தென் கொரியா ஒரு லட்சம் Sq. KM , த.நா. 1.30 லட்சம் Sq.KM). தமிழ்நாட்டு மக்கள் தொகை ஆறு கோடிக்கும் மேல். தென் கொரியாவில் 4.8 கோடி. சியோலில் மட்டுமே ஒரு கோடி. சியோல், இன்சியான் & க்யோங்கி- டோ வைச் சேர்த்தால் (சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் போல்) தேசத்தின் ஜனத்தொகையில் கிட்டத்தட்ட பாதி! என்னடா, கேப்டன் படம் போல் புள்ளி விவரமா என்று பார்க்காதீர்கள்! போவதற்கு முதல் நாள்தான் நெட்டில் படித்தேன்!

சியோலின் இன்சியான் ஏர்போர்ட்டுக்கு 2009 இல் உலகின் மிகச் சிறந்த ஏர்போர்ட் என்ற விருது கிடைத்திருக்கிறது என்றார்கள். " Incheon International Airport (Seoul, S Korea) has been named World's Best Airport for 2009, in the World Airport Survey results published by Skytrax. "

அனுபவத்தில் தெரிகிறது. நான் ஒரு டெர்மினலில் தவற விட்டு விட்ட tag எதுவும் எழுதாத சிறிய hand baggage ஒன்றை கவுண்டரில் முறையிட்ட 13 நிமிடங்களில் என்னிடம் கொண்டு வந்து தந்தார்கள்! நம்ப ஊரில் நடக்குமா என்றெல்லாம் கேட்காதீர்கள்! நடக்கும் என்று என்னைப் பொய் சொல்ல வைக்காதீர்கள்!

நவம்பரிலிருந்து மார்ச் வரை குளிர் பிளந்து விடும் என்றார்கள். நல்ல வேளையாக, நான் போன அக்டோபர் கடைசியில், கிட்டத்தட்ட தில்லியைப் போலவே இருந்தது. ஒரு நாள் மழையில் நனைந்ததும் இதமாகவே இருந்தது.

முன்னேறிய நாடுகளின் பட்டியலில் தென் கொரியாவைக் கண்ணை மூடிக் கொண்டு சேர்க்கலாம். மெட்ரோ ரயிலில் எந்த இளைஞனிடமும் வழி கேட்டால் உடனே மொபைலை எடுத்து க்ளிக் செய்து மெட்ரோ மேப்பைப் பார்த்து உங்களுக்கு விளக்கி விடுவான் "பல்லாவரம் தாண்டியதும் குரோம்பேட் வரும், இறங்கிக்குங்க" என்று! வடிவேலு சொல்வது போல் ரோட்டிலேயே முகம் பார்த்துத் தலை சீவிப் பொட்டு வைத்துக் கொள்ளலாம்!

எல்லா டாக்சிகளிலும் கொரியனில் எழுதப் பட்ட GPS system உண்டு. டாக்சியில் மீட்டர், கிரெடிட் கார்டு வசதி, ரசீது கொடுப்பது எல்லாம் உண்டு. (இருந்தாலும் , ட்ராபிக் சிக்னலிலும் மீட்டர் ஓடுவதால், ஓரிரு முறை ட்ராபிக்கை சாக்காக வைத்து மீட்டரில் அதிக ரீடிங் காட்டியது போல் எனக்குத் தோன்றியது.) ஆனால் ஆங்கிலம்தான் சுட்டுப் போட்டாலும் வர மாட்டேன் என்கிறது. போன தலைமுறையை விடுங்கள், இளைஞர்களிலேயே ஒரு சிலர் மட்டும்தான் நல்ல சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். அப்படி ஒரு ஆள் கிடைப்பது உங்கள் அதிர்ஷ்டம்! மற்றபடி 'NO' என்பதற்கு அழகாக இரண்டு கையையும் குறுக்காக 'X' போல் காட்டுவார்கள் . 'த்ரீ' என்பதற்குக் கட்டை விரலில் இருந்து ஆரம்பித்து மூன்று விரலை ஸ்டைல் ஆகக் காட்டுவார்கள்! ஒரு இளைஞன் "நான் இந்தியாவுக்கு வந்து பூனாவில் ஒரு வருடம் ஆங்கிலம் படித்தேன்" என்றான். பெருமையாக இருந்தது. 'Free Interpretation available' என்று டாக்சியில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் டிரைவருக்கு கொஞ்சூண்டு ஆங்கிலம் தெரியும் என்று அர்த்தம். இல்லாவிட்டால் சைகை பாஷையும் மீட்டர் காட்டும் அமௌண்டும்தான்!

'Work Hard,Party Hard' என்ற கொள்கையில் முழு நம்பிக்கை கொண்ட தேசம், குறிப்பாக இளைய தலைமுறை. செய்யும் எந்தக் காரியத்திலும் ஒரு தீவிர முனைப்பு, கவனம், முழுமை. ஏனோ தானோ போக்கு மருந்துக்கும் கிடையாது. வெளிநாட்டவர்களுக்கு மெனக்கெட்டு உதவும் மனப் பான்மை, இல்லாவிட்டால் நம் நாட்டு இமேஜ் கெட்டு விடுமே என்ற அக்கறை. எனக்குத் தவறாக வழி சொல்லி விட்ட ஒரு பள்ளி மாணவன் மூச்சு இரைக்க ஓடி வந்து தவறை சரி செய்தான்! இவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது.

1910 இலிருந்து இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடையும் வரை ஜப்பானின் காலனியாதிக்கத்தில் இருந்தார்களாம் , இரண்டாய்ப் பிளக்காத கொரியா தேசத்தினர் . அதனால்தானோ என்னவோ, ஜப்பானை எல்லாத் துறையிலும் மிஞ்சிக் காட்ட வேண்டுமென்ற ஒரு உத்வேகம் தெரிகிறது. ஏற்கனவே மிஞ்சி விட்டார்கள் என்றே சொல்லுவேன்! 'ஐயோ, என்ன இருந்தாலும் நாம் இருவரும் (வட, தென் கொரியாக்கள்) ஒரே தேசம்தானே, இப்படிப் பிளவு பட்டுக் கிடக்கிறோமே! ' என்ற ஆதங்கமும் பேச்சில் அவ்வப்போது தெரிகிறது.

Internet டின் மேல் அலாதிப் பிரியம் இவர்களுக்கு! எல்லாக் கட்டடங்களின் உச்சியிலும் கம்பெனி பெயருடன் அதே size font இல் Web address ஐயும் எழுதித் தள்ளி இருக்கிறார்கள்!

சியோலில் இருந்து செங்க்வானுக்கு ஒரு மணி நேர பிளைட்டில் சென்றிருந்தோம். பிளைட்டில் நாம் தூங்கும்போது refreshment serve செய்து முடித்து விட்டால் நம் முன்னால் ஒரு குட்டி ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறார்கள். " When you were resting, we had served refreshments. Pl. call us when you wake up" என்று. என்ன அருமையான ஐடியா!

தேசத்தின் கட்டுமானத்தில் பெண்களின் பங்களிப்பு நன்றாகவே தெரிகிறது. நகர்ப் புற 'White Collar Job' மட்டுமல்லாமல் நான் போயிருந்த தொழிற்சாலையில் யூனிபார்ம் போட்ட எத்தனையோ பெண் தொழிலாளர்களைப் பார்க்க முடிந்தது.

பிச்சைக்காரர்களே கண்ணில் தென்படவில்லை என்று சொல்வதற்கு இருந்தேன், தொப்பி போட்ட கண் தெரியாத ஒரு வயோதிக தம்பதி பாட்டுப் பாடிப் பிச்சை எடுத்ததைப் பார்க்கும் வரையில். பாட்டும் நம்ப ஊர் சரஸ்வதி சபதத்தின் 'தாய் தந்த பிச்சையிலே.. ' அல்லது ராஜபார்ட் ரங்கதுரையின் 'அம்மம்மா, தம்பி என்று நம்பி.. ' போலத்தான் காதில் கேட்டது! கோட்டு சூட்டு எல்லாம் போட்டுக் கொண்டு மெட்ரோவில் ஏதோ ஒரு பெட்டியைத் திறந்து வீடியோ கேசட் போல் ஒரு வஸ்துவை 'பிதாமகன் ' சூர்யா பாணியில் விற்கும் சிலரையும் பார்த்தேன். அப்படி ஒரு ஆளைப் புகைப்படம் எடுக்க முயன்ற போது நாசூக்காக நகர்ந்து விட்டான்.

மற்றவை அடுத்த பகுதியில்.

சினிமா விரும்பி

3 comments:

Cinema Virumbi said...

nanRi Babu!

Cinema Virumbi

கோவி.கண்ணன் said...

தொடர் சிறப்பாகவும் தகவல்களோடும் இருக்கிறது. அடுத்தப் பகுதிக்கு காத்திருக்கிறேன்.

பாராட்டுகள்

Cinema Virumbi said...

nanRi KoVi!

Cinema Virumbi

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...