Tuesday, September 27, 2011

வாழ்க நீ எம்மான்!


சாமர்த்தியமாக, மிக சாமர்த்தியமாக ஒரு பெரிய கூட்டமே மகாத்மா காந்தியைக் குறைத்து மதிப்பிடவோ அல்லது வாய் கூசாமல் இழிவு செய்யவோ காத்திருக்கிறது! இன்று எனக்கு ஒரு SMS வந்தது ' எல்லோரும் காந்தி ஜெயந்தி கொண்டாடுகிறார்கள் ; ஆனால் பகத் சிங்கின் பிறந்த நாளை யாருமே நினைவு கூரவில்லையே! '. இது போல் எழுதுபவர்களுக்கு அப்படியொன்றும் பகத் சிங்கின் மேல் பரம அபிமானம் ஏதும் இல்லை! சந்தடி சாக்கில் காந்தியை நாலு சாத்து சாத்த முடியாதா என்று பார்க்கும் புண்ணியவான்கள்தான் இவர்கள்!

கொஞ்ச நாள் முன்னால் 'மீ நாதுராம் போல்தோய்' (நான் நாதுராம் பேசுகிறேன்) என்றொரு மராத்தி நாடகம் வந்தது. இந்த நாடகத்தில் ஏதோ ராவண வதம், சூரபத்மன் வதம் போல் 'காந்தி வதம்' என்ற சொல்லை அடிக்கடி உபயோகப் படுத்துவார்களாம்! பிறகு 'காந்தி மை பாதர்' என்று ஒரு ஹிந்திப் படம். சொல்லப் போனால் 'ஹே ராமில்' கூட இடையிடையே காந்தியை சன்னமாகக் கிண்டலடிப்பார்கள். முதல் இரவின் போது கமல் 'சத்திய சோதனை' படிக்கும் வசுந்தரா தாஸ் இடம் சொல்வார் ' எனக்குப் பாதிப் புனைகதைகளில் நம்பிக்கையில்லை!'. (I don't believe in semi fiction!) 'சத்திய சோதனை' இவர்களுக்குப் பாதிப் புனைவாம்!

இதைத் தவிர சில அறிவு ஜீவிகள் அவ்வப்போது ' இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் பிரிட்டிஷ்காரனே இந்தியாவை விட்டுப் போய் விடுவதாகத்தான் இருந்தான்' என்பார்கள், ஏதோ இவர்கள் போய் அவன் மனதைத் தோண்டிப் பார்த்தாற்போல! 35 ஆண்டுகளுக்குப் பிறகு 1982 இல் பாக்லாந்து போர் நடக்கும் போது இவர்கள் டீ குடிக்கப் போயிருந்தார்களோ என்னவோ!

காலம் காலமாக அவரை மகாத்மா என்றோ காந்தி அடிகள் என்றோ காந்திஜி என்றோ அண்ணல் என்றோ அழைக்காமல், வேண்டுமென்றே காந்தியார் என்று அழைப்போரும் உண்டு! (ஒரு சுவாரஸ்யமான தகவல் - அமரர் திரு.வி.க.தான் சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகளைப் போல் காந்தி அடிகள் என்ற பிரயோகத்தை உண்டாக்கினார்!). "அவரை தேசப் பிதா என்று சொல்வது தவறு, அது ஐரோப்பாவிலிருந்து கடன் வாங்கிய மரபு. அவர் இந்தியத் தாயின் தலைமகன்" என்று வாய் வக்கணை காட்டுவோரையும் பார்த்திருப்பீர்கள்!

ரொம்பவே நடுநிலையாய் காந்தியை விமர்சிக்கிறார்களாம் ! மகாத்மா காந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை சுகமாக அனுபவித்துக் கொண்டே அவரைத் தூற்றும் பிறவிகளை ' Time Machine' இல் பின்னோக்கிப் போய் 1947 க்கு முந்தைய அடிமை இந்தியாவில் கொண்டு போய் வீசி விட்டு நாம் மட்டும் திரும்பி வந்து விட வேண்டும் !

'நேற்று இன்று நாளை'யில் கவிஞர் வாலி எழுதியது போல் ' இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்!'

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...