Wednesday, March 6, 2013

சுஜாதாவைச் சந்தித்தேன்!பிப்ரவரி 27 அமரர் சுஜாதாவின் நினைவு நாள்.

பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் எழுத்தாளர் சுஜாதாவின் அசுர ரசிகன் நான்!

ஜம்ஷெட்பூரில் சில காலம் பணி புரிந்த போது நண்பர்கள் சொல்வார்கள்: "சுஜாதாவே அசந்து விடுவார்டா, இப்படி ஒரு வெறியன் இருப்பதைப் பார்த்து!"

1993 இல் தில்லியில் 'ஸ்கோப்' வளாகத்தில் எங்கள் அலுவலகத்தின் கீழேதான் ஆறாவது மாடியில் BEL தில்லி அலுவலகம் இருந்தது. ஒரு நாள் லிப்ட் திறக்கும் போது உள்ளே பார்த்தால் BEL மணல் நிற சீருடை அணிந்த ஐந்தாறு பேர் ( ஓரிருவர் தமிழரல்லாதோர் போல் தோன்றியது). நடு நாயகமாக ஒருவர், சுஜாதாவின் பாஸ் போல. பக்கத்தில் மிக உயரமாஆஆஆஆஆஆஆஆன சுஜாதா! ஜிலீர் என்று நாக்குக்கடியில் ஷாக் அடித்தாற்போல் இருந்தது! பாஸ் சுஜாதாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார் "Sometime back, I read an article in 'Manjari''என்று.

தரைத்தளத்தில் இறங்கி அவர்களுடன் கூடவே 'தேனா வங்கி' வாசலில் நிறுத்தப் பட்டிருந்த வெள்ளை நிற அம்பாஸடர் வரை போனேன்.

"சார் நீங்கள் எழுத்தாளர் சுஜாதாதானே?"

"தான்".

என்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டேன். பிரபல நாடகாசிரியரான என் சித்தப்பா பெயரையும் சொன்னேன். ''அவரை நல்லாத் தெரியுமே எனக்கு" என்றார்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நானே BEL அலுவலகம் போனேன் . புதுவரவுகளின் நேர்முகத் தேர்வுக்காக பெங்களூரிலிருந்து இரண்டு நாள் பயணமாக வந்திருக்கிறார் என்று அறிந்தேன். அவருடைய தில்லி (பெங்காலி) உதவியாளருக்கு ஒரே ஆச்சரியம்!

"தமிழ்நாட்டில் சிவாஜி, எம்ஜியாருக்குப் பிறகு இவர்தான் பிரபலம் என்பார்கள். நீங்கள் அதை நிரூபிக்கிறீர்களே! அவரை எப்படி அடையாளம் கண்டீர்கள்?"

"என்னப்பா இது? நாங்கள் பார்க்காத சுஜாதா போட்டோவா!" .

சுஜாதாவை அறைக்குள் போய்ப் பார்த்து மறு நாள் மதியம் அப்பாயிண்ட்மென்ட் வங்கிக் கொண்டேன். ஆனால் இரண்டாம் நாள் இண்டர்வியூ சீக்கிரமே முடிந்து விட அவர் கிளம்பிப் போய் விட்டார். கன்னாட் ப்ளேசில் அவர் அண்ணன் MTNL உயர் அதிகாரி திரு ராஜகோபாலனிட்ம் பேசப் போயிருக்கிறார் என்று அறிந்தேன். டைரக்டரியில் அவர் P&T (அந்தக் காலத்தில் மொபைல் எல்லாம் ஏது?!) நம்பரைத்தேடிப் பேசியதில் " யாரோ உன் வாசகராம் "என்று சுஜாதாவிடம் கொடுத்தார் அவர். எனக்குக் கொடுத்த அப்பாயிண்ட்மென்டைத் தவற விட்டதற்கு வருந்தினார். அடுத்த முறை சந்திப்போமே என்றார். கடைசி வரை அந்த அடுத்த முறை வரவேயில்லை! சில நாட்களிலேயே BEL இல் இருந்து பணி மூப்பு அடைந்து சென்னை வாசியாக மாறி விட்டார்.

அதன் பிறகு 'அம்பலம்' இணைய இதழில் தவறாமல் எழுதுவார். ஓரிரு முறை என்னுடைய ஈ மெயில் கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறார்.

மிகப் பெரிய பில்ட் அப்புக்குப் பிறகு வெறும் ஆன்டி கிளைமாக்ஸாக முடிந்து விட்டாலும் , என்னால் என்றுமே மறக்க முடியாத ஒரு வி.ஐ.பி. சந்திப்பு இது! கிட்டத் தட்ட ஒரு மாதம் வரை இந்தக் கதையைச் சொல்லி நண்பர்களிடம் மொக்கைப் பட்டம் வாங்கிக் கொண்டிருந்தேன்!

சினிமா விரும்பி

No comments:

Blog Widget by LinkWithin

Followers

MyFreeCopyright

myfreecopyright.com registered & protected